Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST
விலை உயர்ந்த துணி ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார்.

முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.

குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார்.

பையன் கேட்பதாக இல்லை.

நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.

அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார்.

அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன்.

பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.



Get it on Google Play