Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST
சதிகாரன் தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான்.

கடிதத்தைக் கண்ட இராயரும் நம் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தள்ளி "இராமா!" என அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கட்டாரியால் அரசரைக் குத்த முயன்றான். சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து வளைத்துப் பின்புறமாகப பிணைத்து விட்டார் அரசர். தம் மன்னர் தனியாக இராமனின் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர்.

மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். அரசரைக் கொலை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர. . .

தெனாலிராமன் "அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது." என வாதாடிப் பார்த்தான். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்." இராமா! சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்." என்றார்.

ஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று " அரசே! நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்." என்றான். அரசர் அவன் புத்தி கூர்மையை மெச்சி அப்படியே வாக்களித்து அவனை விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.



Get it on Google Play