TamilCube
MOBILE
ONLY FOR THE BEST
இறுதிக் கருத்து
முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.
மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா... எங்கே நாவல்பழம்?’’ என்றார்.
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே... தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?’’ என்று கேட்டார்.
குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.
அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!