Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST

Sai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53




அத்தியாயம் - 49

49. மஹானை சோதிக்காதே




ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.


1 ஸத்குருவை ஸாங்கோபாங்கமாகப் (முழுமையாகப்) போற்றும் முயற்சியில் வேதங்களும் புராணங்களுமே திணறிக்கொண் டிருக்கும்போது எதையும் புரிந்துகொள்ள இயலாத என் போன்ற அஞ்ஞானி வாயை மூடிக்கொண்டிருப்பதே மேலாகும்.

2 சிந்தித்துப் பார்த்தால், வாயைப் பொத்திக்கொண்டு மௌனமாக இருப்பதுதான் ஸத்குருவைப் போற்றும் சிறந்த வழியாகும். ஆனால், ஸாயீயின் அடுக்கடுக்கான சீரிய பண்புகள் என்னுடைய மௌனவிரதத்தை மறக்கடித்துவிடுகின்றன.

3 ஸாயீயின் ஆழங்காணமுடியாத லீலைகள் பெரும்பேறு விளைவிப்பவை. அவற்றைக் கண்ணால் கண்ட நான் எப்படிச் சும்மாயிருக்க முடியும்? இனிமையான அந்தத் தின்பண்டங்களை என் நாக்கு ருசிபார்த்தபோது, நான் கதைகேட்பவர்களை நினைவில் கொண்டேன்.

4 அந்தப் பந்தியில் நான் சுவைத்த ஆனந்தரஸத்தை இந்த விருந்திலும் (காவியம்) சேர்க்க முடிவெடுத்தேன். அதனால்தான், இந்த விருந்து சுவாரசியமாகவும் களிப்பூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

5 அறுசுவை விருந்தாயினும், பண்புள்ள நண்பர்கள் பந்தியில் இல்லையெனில், அவ்வுணவு ரசிக்காது. தனியாக அமர்ந்து உண்ணும் விருந்துக்கு ருசியேது?

6 ஸாயீ அனைத்து விருப்பங்களும் நிறைவேறியவர்; எல்லா ஞானியராலும் போற்றப்படுபவர். ஸாயீ தம் பக்தர்களுக்கு ஓய்வையும் சாந்தியையும் அளிக்கும் பூஞ்சோலை; வாழ்க்கையின் சகித்துக்கொள்ளமுடியாத பிரமைகளை நிவாரணம் செய்பவர்.

7 சொல்லுக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலையை என்னுடைய பேச்சால் வர்ணிக்க முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாதவரின் விவரிக்கமுடியாத கலைகளை யான் எங்ஙனம் சாரம் வாங்குவேன்?

8 மங்களங்களுக்கெல்லாம் மங்களமான ஸாயீ தம்முடைய கதைபற்றிய நினைவைக் கருணையுடன் எனக்கு அளித்து இக் காவியத்தைப் பரிபூரணமாக்குகிறார்.

9 அவருடைய அளவிலா மஹிமையைப் பாடுவதற்கு நுழைபவர்களில் யாருக்குக் கதைசொல்லும் சாமர்த்தியம் இருக்கிறது? பராவே1 (பேச்சின் முதல் நிலையே) திறமையின்றிப் பின்வாங்கும்போது, பச்யந்தி1, மத்யமா1 (இடை நிலைகள்) இவற்றின் கதி என்னவோ

10 இம் மூன்றும் வாயை மூடிக்கொண்டு இருக்கும்போது நான்காவதாகிய வைகரீ1 (கடைநிலை) என்ன செய்ய முடியும்? ஈதனைத்தையும் நான் சம்பூர்ணமாக அறிவேன்; ஆயினும், என் மனம் சும்மா இருக்க மறுக்கிறது

11 ஸத்குருவின் பாதங்களில் மூழ்காமல், அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது. ஆகவே, ஸ்ரீ ஹரியின் சொரூபமான ஞானிகளைக் கைகூப்பி, கிருபை செய்யும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.

12 குருவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம். ஆகவே, நாம் ஞானிகளின் சகவாசத்திற்கும், பல கோணங்களில் உருவெடுக்கும் அவர்களுடைய அன்புக்கும் ஏங்கும் பண்பை அபிவிருத்தி செய்துகொள்வோமாக.

13 முழுக்க முழுக்கத் தேஹாபிமானம் உள்ளவனுக்கு பக்தன் என்று சொல்­க்கொள்ளத் தகுதியில்லை. தேஹாபிமானத்தைப் பூரணமாகத் துறந்தவன்தான் உண்மையான பக்தன்.

14 எவனிடம் ஞானகர்வம் உள்ளதோ, எவனிடம், தான் சிறந்தவன் என்னும் தற்பெருமை உண்டோ, எவன் டம்பத்தின் வசிப்பிடமோ, அவனிடம் என்ன புகழ் சேரும்?

15 தம் குருவின் கீர்த்தியைப் பாடாத அபாக்கியவான்களும், செவிப்புலனைப் பெற்றிருந்தபோதிலும் குருவின் பெருமையைக் கவனமாகக் கேட்காதவர்களும், மந்தமதியே உருவெடுத்து வந்தவர்கள் அல்லரோ

16 தீர்த்த யாத்திரை, விரதம், யாகம், தானம் இவற்றைவிட மேன்மையானது தவம். அதனினும் மேன்மையானது ஹரிபஜனை. எல்லாவற்றையும்விட மேன்மையானது குருபாதங்களின்மீது தியானம்.

17 ஸாயீயே ஸாயீபக்தர்களின் தியானம். ஸாயீயே தேவர்களுக்கும் தேவிகளுக்கும் அவர்கள் செய்யும் அர்ச்சனை. ஸாயீயே அவர்களுடைய ரகசியப் பொக்கிஷமுங்கூட இப் பொக்கிஷத்தை அவர்கள் ரட்சிக்கவேண்டும்; ஆனால் கஞ்சத்தனம் கூடாது

18 எப்பொழுதாவது ஒருசமயம் என்னைச் சோம்பல் அண்டும். ஆனால், அந்தர்யாமியான (என்னுள் உறையும்) ஸாயீக்கு அது என்னவென்றே தெரியாது. கதை சொல்ல நான் மறந்தால், சரியான நேரத்தில் அவர் ஞாபகமூட்டுகிறார்.

19 சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நான் நினைக்கலாம். ஆயினும், என்னுடைய சட்டம் இங்கே செல்லுபடியாவதில்லை. ஏனெனில், திடீரென்று என் மனத்தில் உதிக்கும் கதை என்னைப் பேனாவைக் கையிலெடுக்கச் செய்கிறது.

20 அவருடைய அற்புதங்கள் நிறைந்த, கணக்கற்ற கதைகளை பக்தர்களுக்கு அளிப்பதற்காகவும் மற்றும் என்னுடைய நன்மைக்காகவும் இந்த ஸத் சரித்திரத்தை எழுத என்னை ஊக்குவிக்கிறார்.

21 பொதுவாக, ஞானிகளின் கதைகளை ஞானிகளே எழுதுகின்றனர். ஞானிகளின் அருள்வெளிப்பாட்டைப் பெறாமல் எழுதப்படும் நூ­ல் சுவை இருக்காது; வரிக்கு வரி, சோர்வு தட்டும்.

22 கிருபாமூர்த்தியான ஸாயீநாதர் என் மனத்துள் புகுந்து அவருடைய சரித்திரத்தை எழுதச்செய்து வாங்கிக்கொண்டார்; என்னுடைய மனோரதத்தையும் நிறைவுசெய்தார்.

23 வாய், ஸ்ரீஸாயீ நாமத்தை இடைவிடாது ஆவர்த்தனம் செய்யும்போதும், சித்தம் அவருடைய திருவாய்மொழியைச் சிந்திக்கும்போதும், மனம் அவருடைய திருவுருவத்தைத் தியானம் செய்யும்போதும், நான் பூரணமான சாந்தியை அனுபவிக்கிறேன்.

24 வாக்கில் ஸாயீயின் நாமத்துடனும், இதயத்தில் ஸாயீயின்மீது பிரேமையுடனும், ஸாயீயைப் பிரீதி செய்வதற்காகவே செயல்புரிபவனுக்கு ஸாயீ பெருமளவில் கடன்பட்டிருக்கிறார்

25 சம்சார பந்தங்களை அறுத்தெறிவதற்கு இதைவிட மேலான சாதனம் ஏதும் இல்லை. ஸாயீயின் கதை பரம பாவனமானது (தூய்மையளிப்பது); படித்தாலும் கேட்டாலும் சுகத்தை அளிக்கும்.

26 கால்களால் ஸாயீயைப் பிரதட்சிணம் செய்யுங்கள். காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளுங்கள். கண்களால் ஸாயீயை தரிசனம் செய்யுங்கள். எல்லா அங்கங்களாலும் அவரைப் பிரேமையுடன் ஆ­ங்கனம் செய்யுங்கள் (தழுவுங்கள்).

27 அவருக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யுங்கள். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துங்கள். வாய் அவருடைய நாமஸ்மரணத்தையே செய்யட்டும். மூக்கு அவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மலர்களின் (நிர்மா­யத்தின்) நறுமணத்தை நுகரட்டும்.

28 இப்பொழுது, கதையை விட்ட இடத்தில் தொடர்வோமாக. 'அற்புதங்களைக் காண்பதில் ஆவல் அதிகம் காட்டிய பக்தர் ஒருவரின் காதையைச் சொல்லப்போகிறேன்ஃ என்று கடந்த அத்தியாயத்தில் கதைகேட்பவர்களுக்கு ஒரு வாக்கு அளிக்கப்பட்டது.

29 உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவரும், ஞானிகளின் சக்திகளை அறியாதவருமாகிய மனிதர், அவரிடம் வேறொருவர் சொல்லும் விவரணத்தை மனத்தில் நம்பிக்கையின்றிக் கேட்கிறார்.

30 நண்பர்கள் ஸாயீயின் பெருமைகளைச் சொன்னபோது அவர் குற்றங்காண்பதற்காகவே கேட்டார். இவ்வுலகில் தாமே நேரிடையாக அனுபவித்து உணரமுடியாத எதையும் அவர் நம்ப மறுத்தார்.

31 அவருடைய பெயர் ஹரி கானோபா. ஸாயீயைத் தாமே சோதித்துப் பார்த்துவிடும் நோக்கத்துடன் அவர் பம்பாயி­ருந்து நண்பர்களுடன் யாத்திரையாகக் கிளம்பினார்.

32 ஆனால், எல்லாருடைய இதயத்தையும் ஒளிரச்செய்யும் ஸாயீயின் கலைத்திறனையும் புதினங்கள் புரியும் லாவகத்தையும் நிர்த்தாரணமாக எவரால் அறிந்துகொள்ள முடியும்?

33 ஹரிபாவூ சிர்டியை நோக்கிக் கிளம்பியபோதே ஸமர்த்த ஸாயீக்கு ஹரிபாவூ வரும் காரணம் தெரிந்துவிட்டது வெறும் அற்புதங்களை அனுபவிக்க விரும்புபவர்; அவருடைய தகுதி அவ்வளவே

34 ஆகவே, அவருக்கு அதுவே அளிக்கப்பட்டது. அவரும் ஆட்கொள்ளப்பட்டார் அவ்விதமாக, அவர் பட்ட சிரமமும் பயனுடையதாயிற்று. யுக்திகளைப் பிரயோகிப்பதில் (எய்த­ல்) ஞானிகள் எத்தகைய வித்தகர்கள்

35 கோபர்காங்வில் ஹரிபாவூ தம் நண்பருடன் ஒரு குதிரைவண்டியில் ஏறினார். கோதாவரி நதியில் ஸ்நானம் செய்த பிறகு சிர்டீக்குப் பயணமானார்.

36 சிர்டீ வந்துசேர்ந்தார். கால்களையும் கைகளையும் கழுவிக்கொண்டு ஞானியைப் பார்ப்பதற்காகக் கிளம்பினார்.

37 தலையில் ஒரு ஜரிகைத் தலைப்பாகையையும் கால்களில் புத்தம்புதிய ஜோடி செருப்பையும் அணிந்துகொண்டு ஹரிபாவூ ஸாயீ பாபாவை தரிசனம் செய்ய உற்சாகமாக வந்தார்.

38 மசூதியை நெருங்கியபோது ஸாயீயை தூரத்தி­ருந்தே பார்த்த ஹரிபாவூ, பாபாவின் சன்னிதிக்குச் சென்று நமஸ்காரம் செய்ய விரும்பினார்.

39 ஆனால், புதிய ஜோடி செருப்பு இதற்கு ஒரு தடங்கலாக அமைந்தது. அதை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. கடைசியில், ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அவற்றை உள்ளே தள்ளினார்.

40 பிறகு தரிசனத்திற்காக மேலே சென்றார். அன்புடன் ஸாயீபாதங்களில் வணங்கினார். உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு திரும்பினார். வாடாவுக்குத் திரும்ப முனைந்தார்.

41 ஆனால், செருப்புகளை அணியச் சென்றபோது அங்கு அவை காணப்படவில்லை. எங்கெங்கோ தேடினார்; கிடைக்கவில்லை. நம்பிக்கையை அறவே உதறிவிட்டு வாடிய முகத்துடன் வெறும் காலோடு வாடாவுக்குத் திரும்பி வந்தார்.

42 அங்கு எத்தனையோ மனிதர்கள் சதா போவதும் வருவதுமாக இருந்தனர். யாரிடம் சென்று கேட்பது? அவருக்கு யோசனை ஏதும் தோன்றவில்லை.

43 அவருடைய மனம் நிம்மதியிழந்து குழம்பியது. தொலைந்துபோன செருப்பு மனக்கண்முன்னே வந்து நின்றது. அவருடைய மனத்தைச் செருப்புப் பற்றிக்கொண்டது. சிந்தனையெல்லாம் செருப்புமயம் ஆயிற்று

44 ''ஐயகோ எவ்வளவு ஆசையுடனும் ஆர்வத்துடனும் அது வாங்கப்பட்டது அந்தச் செருப்புத் தொலைந்துபோய்விட்டது; தொலைந்தேபோய்விட்டது யாரோ ஒரு திருடன் அவற்றைத் திருடிவிட்டான். இது நிச்சயம்.ஃஃ (ஹரிபாவூவின் புலம்பல்)

45 ஆனபோதிலும், பிறகு அவர் ஸ்நானம் செய்தார். பூஜை, நைவேத்தியம் ஆகியவை முடிந்த பிறகு பந்தியில் உட்கார்ந்து போஜனம் செய்தார். ஆனால், மனம் சமாதானமடையவில்லை.

46 ''ஸபாமண்டபம் ஸாயீயின் இடம். ஸாயீயின் கண்ணில் படாமல் யார் என்னுடைய செருப்பைத் திருடியிருக்க முடியும்? பெரிய ஆச்சரியமாக இருக்கிறதேஃஃ

47 சஞ்சலமும் வருத்தமும் அவர் மனத்தை நிரப்பின. அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. கோஷ்டியுடன் அவரும் கை கழுவ வெளியே வந்தார்.

48 எதிர்பாராது அங்கு ஒரு மராட்டிப் பையன் திடீரென்று தோன்றினான். ஒரு கோலை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தான். கோ­ன் நுனியில் காணாமற்போன செருப்புகள் தொங்கிக்கொண் டிருந்தன

49 சாப்பிட்டபின் மக்கள் கையைக் கழுவிக்கொண் டிருந்தனர். அந்த சமயத்தில், யாரையோ தேடிக்கொண்டு வந்த அந்தப் பையன் சொன்னான், ''பாபா இந்தக் கோலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். --

50 ''பாபா பாடம் சொன்னார், 'மகனே, ஹரீ கா பேடா(ஆஉபஅ). ஜரீ கா பேடா(டஏஉபஅ) {ஹரி, கானோபாவின் மகன், ஜரிகைத் தலைப்பாகை அணிந்தவர்- என்று கூவிக்கொண்டே போ. இவை என்னுடையவை என்று தெரிவித்து எவர் உன்னிடம் உற்சாகமாக ஒட்டிக்கொள்கிறாரோ, அவரிடம் கொடுத்துவிடு.--

51 '''ஆனால், முத­ல் அவர்தாம் ஹரி கா பேடா என்பதும், ஜரீ கா பேடா என்பதும் நிச்சயம் செய்யப்படவேண்டும். நீ முத­ல் அதிகம் பேசாதே. ஊர்ஜிதம் ஆனபின் செருப்புகளைக் கொடுத்துவிடு.ஃஃஃ

52 கூவலைக் கேட்டுத் தம்முடைய செருப்பை அடையாளம் கண்டுகொண்ட ஹரிபாவூ, ஆச்சரியம் நிரம்பிய மனத்துடன் தாவியடித்து முன்னேறினார்.

53 விழிகளில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது. தொலைந்துபோன செருப்பை மீண்டும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.

54 ஹரிபாவூ பையனைக் கூவியழைத்தார், ''ஏய், ஏய், இங்கு வா. அந்தச் செருப்பை என்னிடம் கொண்டுவாஃஃ செருப்புகளைக் கருத்துடன் பரிசோதித்தபின் கேட்டார், ''இவற்றை நீ எங்கே கண்டெடுத்தாய்? விவரத்தை எனக்கு சீக்கிரமாகச் சொல்ஃஃ

55 பையன் பதிலுரைத்தான், ''அது எனக்குத் தெரியாது. நான் பாபாவின் ஆணையை மதித்து நடக்கவேண்டும். ஹரீ கா பேடா யாரோ, அவர் தம்முடைய ஜரிகைத் தலைப்பாகையை என்னிடம் காட்டவேண்டும்.--

56 ''அவரிடந்தான் நான் செருப்பைக் கொடுப்பேன். வேறு யாரையும் நான் அங்கீகரிக்கமாட்டேன். பாபா அளித்த குறிப்புகளோடு யார் சரியாகப் பொருந்துகிறாரோ, அவர்தாம் செருப்பை எடுத்துக்கொள்ள முடியும்.ஃஃ

57 ஹரிபாவூ சொன்னார், ''ஏ பையா, இவை என்னுடையவை.ஃஃ ஆனால், பையன் கொடுக்க மறுத்தான். ஆகவே, பாபா அளித்த குறிப்புகள்பற்றிய விவரங்களை அளித்துப் பையனை ஹரிபாவூ நம்பவைத்தார்.

58 ஹரிபாவூ சொன்னார், ''பையா, என்னுடைய பெயர் ஹரி. நான் கானோபா என்பவரின் மகன். பாபா சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மை. அவை எனக்கு முழுமையாகப் பொருந்துகின்றன.--

59 ''இதோ, இந்த ஜரிகைத் தலைப்பாகையைப் பார். உன்னுடைய மனத்தி­ருந்து சந்தேகம் விலகும். செருப்புக்கு நான்தான் சொந்தக்காரன் என்பது ருசுவாகும். வேறு யாரும் செருப்புக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது.ஃஃ

60 முடிவில், பையனுக்கு நம்பிக்கை பிறந்தது. செருப்புகளை ஹரிபாவூவிடம் ஒப்படைத்தான். ஹரிபாவூவின் மனோரதம் நிறைவேறியது. ஸாயீ ஒரு ஞானி என்ற சுயானுபவம் ஏற்பட்டது

61 ''என்னுடைய தலைப்பாகைக்கு ஜரிகைக் கரை உண்டென்பது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. எல்லாரும் காணும்படியாக அது என் தலைமேல் இருக்கிறது.--

62 ''ஆயினும், நான் ஓர் அசலூரான். சிர்டீக்கு முதல் தடவையாக இன்றுதான் வந்திருக்கிறேன். என் பெயர் ஹரி என்பது பாபாவுக்கு எப்படித் தெரியும்?--

63 ''இங்கிருப்பவர் எவருமே என் பிதா கானோபாவைப் பார்த்ததில்லை. ஆயினும், 'காஃ என்ற எழுத்தால் அவருடைய பெயர் கோடிகாண்பிக்கப்பட்டது. இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.--

64 ''அப்பொழுது, என் நண்பர்கள் ஞானி ஸாயீயின் மஹிமையை விளக்கியபோது நான் அவர்களுடைய வார்த்தைகளை அவமதித்தேன். அதுபற்றி எனக்கு இப்பொழுது பச்சாத்தாபம் (செய்த குற்றத்தைக் குறித்து வருத்தம்) ஏற்படுகிறது.--

65 ''இப்பொழுது, எனக்கே அனுபவம் கிடைத்தபின் ஸாயீயின் பிரபாவத்தை அறிந்துகொண்டேன். ஸ்ரீஸாயீ ஒரு மஹானுபாவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.ஃஃ

66 மனம் எப்படியோ அப்படியே பா(ஆஏஅ)வம். ஹரிபாவூவின் அனுபவமும் அவ்வாறே. ஞானிகளைப் பரீட்சை செய்து பார்க்கவேண்டுமென்ற ஆசையே அவருடைய சுபாவம் (இயல்பு). ஆன்மீக முன்னேற்றத்தில் அவர் மனம்பதிக்கவில்லை.

67 ஸமர்த்த ஸாயீ ஒரு மஹானுபாவர் என்பதை நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடைய அனுபவங்களால் விவரித்தனர். அந்தப் புதுமையைத் தாமே நேரில் பார்க்கவேண்டும் என்பது ஒன்றுதான், அவர் சிர்டீ சென்றதற்குக் காரணம்.

68 'ஞானியின் பாதங்களில் ஜீவனை வைத்து இறைவனை அடையவேண்டும்ஃ என்னும் விருப்பம் அவர் மனத்தில் சிறிதளவும் இல்லை. பச்சோந்தியால் எவ்வளவு தூரம் தாண்டமுடியும்?

69 அற்புதம் காணவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் ஞானியின் வாயிற்படிக்குச் சென்றவருடைய தொலைந்துபோன புத்தம்புதிய ஜோடி செருப்பு, அவர் இருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தது

70 கேவலம், ஒரு ஜோடி செருப்பு தொலைந்துபோனதால் என்ன பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்க முடியும்? ஆயினும், அதைப்பற்றி அவருடைய மனம் ஓயாமல் அரித்துக்கொண் டிருந்ததால், செருப்பு திரும்பி வரும்வரை மனம் அமைதியடையவில்லை.

71 ஞானிகளை அடைவதற்குண்டான மார்க்கங்கள் இரண்டு. ஒன்று பக்தி, இரண்டாவது ஞானம். ஆனால், ஞானமார்க்கத்தில் ஆயாசம் (களைப்பு) விண்ணளவு; பக்தி மார்க்கத்தின் முயற்சிகள் சுலபமானவை.

72 பக்தி மார்க்கம் அவ்வளவு சுலபமெனில், ஏன் எல்லாரும் அந்த வழியில் நடப்பதில்லை? ஏனெனில், அதற்குப் பெரும்பாக்கியம் தேவைப்படுகிறது. அது இருந்தால்தான் அவ்வழியில் நடக்கமுடியும்.

73 கோடி ஜன்மங்களின் புண்ணியம் ஒன்றுசேரும்போதுதான் ஞானிகளின் அருகே செல்லமுடியும். ஞானிகளைச் சென்றடையும் பாக்கியம் கிடைப்பவர்களுக்குத்தான் பக்தி மலரும்.

74 நமக்குத் தெரிந்ததெல்லாம் உலகியல்வாழ்வுதான். நம்முடைய பற்றுகளும் அதன்மீதே. அதி­ருந்து விடுபடும் வழியை அறியோம். மனத்தின் இயல்பு இவ்வாறிருக்கும்போது பக்தி எப்படி உண்டாகும்?

75 நம்முடைய பக்தி எவ்வளவோ, அவ்வளவே நாம் அடையும் பேறுகளும். இந்த விதி எக் காலத்துக்கும் பொருந்தும்; இதன்படியே எல்லாம் நடக்கும்; இதைப்பற்றி எள்ளளவும் பிராந்தி (மனமயக்கம்) வேண்டா.

76 இரவுபகலாகப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக நாம் ஸாயீயைச் சுற்றிக் குழுமியுள்ளோம். ஆகவே, நமக்குக் கிடைப்பனவும் அவையாகத்தான் இருக்கும் அதேசமயம், பரமார்த்தத்தை (வீடுபேறு) நாடுபவர்களுக்குப் பரமார்த்தம் கிடைக்கும்.

77 ஆக, இப்பொழுது, சோமதேவ சுவாமி என்னும் பெயர் கொண்டவரும் ஸாயீயை சோதித்துப் பார்க்க சிர்டீக்கு நேரில் வந்தவருமான இன்னொரு நபரின் கதையைக் கேளுங்கள்.

78 1906 ஆம் ஆண்டு, உத்தரகாசியில் ஒரு தருமசத்திரத்தில் தங்கியிருந்த காலத்தில், சோமதேவ சுவாமி, பாயீஜி என்ற மனிதரை சந்தித்தார்.

79 கைலாசவாசியும் பிரசித்தி பெற்றவருமான ஹரி ஸீதாராம் தீக்ஷிதரின் சகோதரர் இந்த பாயீஜி. பத்ரிகேதார் புனிதப் பயணம் சென்றபோது வழியில் பாயீஜி சோமதேவ சுவாமியை சந்தித்தார்.

80 பத்ரிநாத், கேதார்நாத் தரிசனத்தை முடித்துக்கொண்டு பாயீஜி மலைப்பாதையில் கீழே இறங்கினார். வழியில் ஒவ்வோர் ஊராகக் கடந்து வந்தபோது பல சத்திரங்களைக் கண்டார். ஒரு சத்திரத்தில் யாத்திரிகர்கள் சிலர் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

81 அவர்களில் ஒருவர், பிற்காலத்தில், ஹரித்துவார் சுவாமி என்னும் பெயரால் எல்லாராலும் அறியப்பட்டார். அவர் பாபாவின் வசீகரிப்புக்கு உள்ளானார்.

82 அவருடைய கதை இது; நற்போதனை அளிக்கும்; பாபாவின் சொரூபத்தை விளக்கும்; கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்; எல்லாருக்கும் ஆனந்தமளிக்கும்.

83 பாயீஜி காலைக்கடனைக் கழிப்பதற்காகச் சத்திரத்தி­ருந்து வெளியே சென்றபோது இந்த சுவாமிஜியை வழியில் சந்தித்தார். சகஜமான உரையாடல் மூலமாக இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு உண்டாகியது.

84 இந்த சந்திப்பு ஏற்பட்டது கங்கோத்திரிக்குக் கீழ்ப் பிரதேசத்தில். டேரா டூனி­ருந்து நூற்றுநாற்பது மைல் தூரத்தி­ருக்கும் உத்தரகாசி என்னும் ஊரில் சகவாசம் ஏற்பட்டது.

85 கையில் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்காக சுவாமி காலைநேரத்தில் சென்றார். பாயீஜியும் அந்த இடத்திற்கு அதே நோக்கத்துடன் சென்றார்.

86 முத­ல் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர், வழியில் பரஸ்பரம் சந்தித்தபோது குசலம் விசாரித்தனர்; சந்தோஷமாக உரையாடினர்.

87 பேசப் பேச, நட்பு மலர்ந்தது; பிரேமை வளர்ந்தது. ஒருவரையொருவர், வசிப்பிடம் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டனர்.

88 ''நீங்கள் ஹரித்துவாரில் வசிக்கிறீர்கள். நாங்கள் நாகபுரியில் (நாக்பூரில்) வசிக்கிறோம். நீங்கள் எப்பொழுதாவது அந்தப் பக்கம் வரும்படி நேர்ந்தால் எங்களுக்கு தரிசனம் தாருங்கள்.--

89 ''திருத்தலப் பயணமாக நாகபுரிக்கு வந்தால், எங்களுடைய இல்லத்தைப் புனிதப்படுத்துங்கள். மறுபடியும் தரிசனம் தாருங்கள். சிறிய சேவைகள் செய்ய எங்களை அனுமதியுங்கள்.--

90 ''எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய இல்லத்தில் பாதம் பதித்து அதைப் புனிதமாக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.ஃஃ (பாயீஜி)
சுவாமிஜி பதில் கூறினார், ''நாராயணர் உமது இச்சையைப் பூர்த்திசெய்வாராக.ஃஃ

91 1906 ஆம் ஆண்டு, உத்தரகாசிப் பிரதேசத்தில் இவ்விருவருக்குமிடையே நடந்த சம்பாஷணை மேற்கண்டவாறு.

92 பரஸ்பரம் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். மைதானத்தை விட்டு வெளியே வந்தவுடன் பிரிந்தனர்.

93 ஐந்தாண்டுக் காலம் கழிந்தது. சுவாமிஜி ஸாயீயை சந்திக்கவேண்டிய வேளை நெருங்கியது. பாயீஜியைக் காணவேண்டுமென்ற உந்துதல் சுவாமிஜிக்கு ஏற்பட்டது.

94 ஆகவே, 1911 ஆம் ஆண்டு, சுவாமிஜி நாக்பூருக்கு வந்தார். ஸாயீநாதரின் பவித்திரமான சரித்திரத்தைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.

95 சிர்டீ க்ஷேத்திரத்தை சுவாமிஜி சென்றடைவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின், பாயீஜி ஒரு சிபாரிசுக் கடிதமும் கொடுத்தார். இதன் பிறகு சுவாமி நாக்பூரை விட்டுக் கிளம்பினார்.

96 மன்மாடில் இறங்கியபோது கோபர்காங்வ் ரயில்வண்டி தயாராகக் காத்திருந்தது. கோபர்காங்வில் ஒரு குதிரைவண்டியில் ஏறி ஆனந்தம் நிரம்பியவராக சுவாமிஜி ஸாயீதரிசனத்திற்குச் சென்றார்.

97 எங்கே சென்று பார்த்தாலும் சாதுக்களுடைய பழக்கவழக்கங்களும் நடையுடைபாவனைகளும் ஒரே சீராக இருப்பதில்லை. ஒருவர் ஒருவிதம், இன்னொருவர் வேறுவிதம். அவர்கள் ஒரேமாதிரியாக எங்கும் இருப்பதில்லை.

98 ஒரு ஞானியின் பழக்கவழக்கங்களும் அனுஷ்டானமும் இன்னொரு ஞானிக்குப் பிரமாணம் (அளவுகோல்) ஆகா. இவற்றில் எது தூய்மையானது, எது தூய்மையற்றது என்று அனுமானிக்க நம்மிடம் சாதனம் ஏதும் இல்லை.

99 கேட்கப்போனால், ஞானியை தரிசனம் செய்யச் செல்பவர் இதைப்பற்றி எதற்காக மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? ஒரு ஞானியின் நடைமுறையை ஆராய்ச்சி செய்யப் புகுபவர் தமக்கே தீங்கு இழைத்துக்கொள்வார் அல்லரோ?

100 ஆனால், சுவாமிஜியின் மனத்தியல்பு நானாவிதமான தர்க்கங்களையும் குதர்க்கங்களையுமே நாடியது. தூரத்தி­ருந்தே சிர்டீயின் கொடிகளைப் பார்த்த அவருக்குக் கற்பனைகள் பல உதித்தன.

101 அவருடன்கூட இருந்தவர்கள் மசூதியின் கலசத்திற்கு மேலே பறந்துகொண் டிருந்த கொடியைப் பார்த்தவுடன் வந்தனம் செய்தனர்.

102 கிடைக்கப்போகும் ஸாயீதரிசனம்பற்றி சுவாமிஜியின் மனம் உற்சாகமாக இருந்தது. ஆயினும், அவரால் தாம் பார்த்த கொடியை அசட்டைசெய்ய முடியவில்லை.

103 கொடியை தரிசனம் செய்யும்போதே பக்தி பூரித்தெழுகிறது. இதுதான் எல்லாரும் அடையும் அனுபவம். இதுவே பக்திப்பிரேமையின் லக்ஷணம் (இயல்பு). இதில் வழக்கத்திற்கு மாறானது ஏதும் இல்லை.

104 ஆனால், தூரத்தி­ருந்தே கொடியைப் பார்த்த சுவாமியின் அற்பமனத்தில் கற்பனைக்குமேல் கற்பனையாக உதித்தன. அவருடைய மனத்தின் விசித்திரமான இயல்பு அது

105 பதாகைகளின்மீது (விருதுக்கொடிகளின்மீது) இவ்வளவு விருப்பம் வைத்தல் சாதுவின் குணமாகுமா? தேவாலயத்தின்மேல் கொடி பறக்கவிடுவது சாதுத்துவத்திற்குக் கறை அன்றோ

106 ஒரு சாது இவ் வழியில் மரியாதை தேடுவது, அவர், கேவலம் கௌரவத்தையும் புகழையும் நாடுவதையே காட்டுகிறது. இவ்வகையான சாதுத்துவம் மனத்தை ஈர்ப்பதில்லை. உண்மையில் இது இவர்களின் பெருங்குறைபாடு

107 சாராம்சம் என்னவென்றால், ஒருவரின் மனச்சாயல் எப்படியோ அப்படியே அவர் சாதுக்களை அணுகும் முறையும் அமையும். சுவாமியின் மனம் தீர்மானித்தது, ''எனக்கு ஸாயீயின் அநுக்கிரஹம் வேண்டா.--

108 ''நான் இவ்வளவு தூரம் வந்தது வீண்.ஃஃ சுவாமி பாபாவின்மீது இழிவுணர்ச்சி கொண்டார். அங்கிருந்து உடனே திரும்பிவிட அவசர முடிவெடுத்தார்.

109 ''இது புகழுக்கும் பகட்டுக்கும் ஆசைப்படும் வீண்பெருமையின்றி வேறெதுவும் இல்லை. ஒரு சாதுவுக்குப் படாடோபம் எதற்கு? கொடியைப்பற்றி என்னால் வேறெந்த காரணத்தையும் அனுமானிக்க முடியவில்லை.--

110 ''இந்த சாது கொடியைப் பறக்கவிட்டுத் தம்முடைய பெருமையைப் பீத்துகிறார். இதுவே இவருடைய சாதுத்துவத்திற்குப் பெருங்குறையாக ஆகிவிட்டது. இந்த சாதுவை நான் எதற்காக தரிசிக்க வேண்டும்?--

111 ''இம்மாதிரியான தரிசனத்தால் மனம் என்ன நிம்மதி பெறும்? ஆஹா பறக்கும் இந்தக் கொடி டம்பத்தையே பறைசாற்றுகிறது இதி­ருந்து எந்தவிதமான மனவொருமைப்பாடும் கிடைக்காது.ஃஃ

112 ஆகவே, அவர் தமக்குத்தாமே சொல்­க்கொண்டார், ''நான் வந்தவழியே திரும்பிச் செல்வதே நல்லது. தரிசனம் செய்ய நினைப்பது நற்சிந்தனையாகத் தெரியவில்லை. அடடா நான் எப்படி ஏமாறிப்போனேன்ஃஃ

113 அப்பொழுது, உடன் வந்தவர்கள் அவரிடம் கூறினர், ''நீங்கள் எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்? கேவலம், கொடிகள் ஏன் உங்கள் மனத்தை இவ்வாறு கலவரமடையச் செய்கின்றன?--

114 ''நாம் இப்பொழுது மிக அருகில் வந்துவிட்டோம். தேர், பல்லக்கு, குதிரை, இத்தியாதி பரிவாரங்களைப் பார்த்தால், நீர் இன்னும் எவ்வளவு கலவரமடைவீர்ஃஃ

115 இதைக் கேட்ட சுவாமி மேலும் எரிச்சலுற்றார். ''முரசுகளையும் பல்லக்குகளையும் குதிரைகளையும் வைத்துக்கொண்டு ஜம்பம் காட்டும் சாதுக்கள்- ஆஹா இவர்களை நான் கொஞ்சமாகவா பார்த்திருக்கிறேன்ஃஃ

116 இவ்வாறான எண்ணங்கள் மனத்துள்ளே ஓட, சோமதேவஜி திரும்பிவிடத் தயாரானார். அவர் நினைத்தார், ''சிர்டீ செல்வதுபற்றிய எண்ணம் நல்லதில்லை. நதிக்குச் (கோதாவரிக்குச்) செல்லும் பாதையில் திரும்புவதே நல்லதுஃஃ

117 ஆனால், உடன் வந்தவர்கள் அவரை விடுவதாக இல்லை. ''நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இந்தக் கட்டத்தில் தயவுசெய்து திரும்பிச் செல்லாதீர்--

118 ''இவ்வளவு தூரம் வந்தவர் இன்னும் கொஞ்சம் வாருங்கள். தர்க்கம் செய்ய
வேண்டா. மசூதியின்மேல் பறக்கும் கொடிக்கும் சாதுவுக்கும் சம்பந்தம் இல்லை.--

119 ''ஏனெனில், இந்த சாதுவுக்குக் கொடி தேவையில்லை; புகழ் தேவையில்லை; கௌரவமும் தேவையில்லை. கிராமத்தில் வசிக்கும் மக்கள்தாம் பக்திக்குப் பிரமாணமாக இம்மாதிரியான பூஷணங்களை (அணிகலன்களை) விரும்புகின்றனர்.--

120 ''ஆகவே, நீங்கள் கொடியைப் பார்க்க வேண்டா. சும்மா சென்று தரிசனம் செய்யுங்கள். அங்கு ஒருகணமும் அதிகமாகத் தங்க வேண்டா; உடனே திரும்பிவிடுங்கள்.ஃஃ

121 இதனிடையே குதிரைவண்டி சிர்டீயை நெருங்கிவிட்டது. ஆகவே, மேற்கண்ட நேர்மையான உபதேசத்தைக் கேட்ட சுவாமி நினைத்தார், 'மனக்கலக்கத்தை ஒருவழியாக ஒழித்துவிடலாமே. குற்றவுணர்ச்சியாவது இல்லாது போகும்ஃ

122 ஸமர்த்த ஸாயீயின் தரிசனம் சுவாமியின் மனத்தை உருக்கியது. அன்பு, விழிகளைக் கண்ணீரால் நிரப்பியது. பொங்கிவந்த உணர்ச்சி தொண்டையை அடைத்தது.

123 சித்தம் மகிழ்ந்தது. கண்கள் உல்லாசத்தால் மலர்ந்தன. பாபாவின் பாததூளியில் ஸ்நானம் செய்வதற்கு மனம் துடித்தது.

124 அந்த அழகிய திருவுருவத்தைப் பார்த்த சுவாமியின் இதயமும் கண்களும் நிலைக்குத்தி நின்றன. மோஹத்தால் ஆட்கொள்ளப்பட்டு பாபாவையே பார்த்துக்கொண் டிருந்தார்.

125 குதர்க்கம் மனத்தை விட்டு ஒழிந்தது. தரிசனம் தந்த ஆனந்தத்தால் இதயம் பொங்கிவழிந்தது. பாபாவின் ஸகுணரூபம் கண்களில் பதிந்தது. புவா (சுவாமி) ஆனந்தக்கட­ல் மிதந்தார்

126 கண்களால் மஹானுபாவரைப் பார்த்த சோமதேவ சுவாமி பெருங்களிப்பு அடைந்தார். தம்முள்ளேயே மூழ்கி பரமசாந்தி நிலையை எய்தினார். அவ்விடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வசிக்கலாம் என்றும் நினைத்தார்.

127 தரிசனம் ஒன்றே விகற்பங்களை அகற்றியது. புத்தி அசைவற்று நின்றது. வேற்றுமை உணர்வு விலகியது. ஐக்கிய உணர்வு மேலோங்கியது.

128 வார்த்தைகள் வெளிவர மறுத்ததால், வாய் மௌனம் சாதித்தது. கண்கள் இமைக்க மறந்தன. அகத்திலும் புறத்திலும் பிரபஞ்சப் பேருணர்வு நிரம்பி வழிந்தது. விளக்கமுடியாத ஓர் அமைதி அவரை விழுங்கியது

129 ஆரம்பத்தில், கொடியைக் கண்டு அவர் திரும்பிவிட முயன்றார். ஆனால், பிறகோ, பிரேமையால் விளைந்த கண்ணீரால் விழிகள் நிரம்பின. அஷ்டபா(ஆஏஅ)வம்1 அவரை ஆட்கொண்டது. பாபாவின் மீதான பிரேமையில் மூழ்கினார்.

130 'எவ்விடத்தில் உன் மனம் பூரணமாக ஒருமைப்படுகிறதோ, அவ்விடமே உன் இடம் என அறிவாயாகஃ தம் குருவின் இந்த உபதேசம் அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. புவா பிரேமையால் தாக்குண்டார்

131 புவா மெல்ல மெல்ல முன்னேற, பாபாவின் கோபமும் படிப்படியாக ஓங்கியது. பாபா வசைமாரி பொழியப்பொழிய, புவாவின் பிரீதி இரட்டித்தது

132 ஸமர்த்த ஸாயீயின் செயல்கள்தாம் என்னே பாபா எடுத்த நரஸிம்ஹ அவதாரம் தத்ரூபமாகவும் (முழுவதும் ஒற்றுமையான வடிவமாகவும்) பூரணமாகவும் அமைந்தது.

133 ''எங்களுடைய டம்பம் எங்களுடனேயே இருக்கட்டும் போம் வெளியே; திரும்பிப் போம். மறுபடியும் என்னுடைய மசூதியில் கால்வைக்காதீர்; ஜாக்கிரதை--

134 ''மசூதியின்மேல் கொடி பறக்கவிடுபவரை எதற்காக தரிசனம் செய்யவேண்டும்? கொடி பறக்கவிடுவது ஞானிக்கு லக்ஷணமா (அழகா)? ஆகவே, ஒருகணத்தையும் இங்கு வீண்செய்யாதீர்ஃஃ என்று பாபா கர்ஜித்தார்.

135 பின்னர், பயமும் ஐயமும் நிரம்பிய மனத்துடன் சுவாமி சபாமண்டபத்துள் நுழைந்தார். தூரத்தி­ருந்து ஸாயீயின் உருவத்தைப் பார்த்த சுவாமியால் அங்கு நிம்மதியாக உட்கார முடியவில்லை.

136 புவாவின் எண்ணங்களின் எதிரொ­, அவர்தம் காதுகளில் சொல்லுக்குச்சொல் துல்­யமாக மோதி அவரை வெட்கப்படச் செய்தது. உட்கார்ந்திருந்த இடத்திலேயே அவர் நினைத்தார், ''மஹராஜ் எங்கு நடப்பதையும் அறியும் சக்தி பெற்றவர்--

137 ''ஓ, என்னுடைய சிற்றறிவு எங்கே; மஹராஜின் பிரபஞ்சப் பேரறிவு எங்கே இவருடைய இதயத் தூய்மைதான் என்னே என்னுடைய பழைய கற்பனை எவ்வளவு விபரீதமானது--

138 ''ஸாயீ சிலரைத் தழுவிக்கொள்கிறார்; சிலரைக் கையால் தொடுகிறார். சிலருக்கு ஆசுவாசம் (ஆறுதல்) அளிக்கிறார். மேலும் பலரின்மீது தம் கடைக்கண் பார்வையால் கருணை பொழிகிறார்.--

139 ''சிலரைப் பார்த்துப் புன்னகை பூக்கிறார். துக்கப்படுபவர்களை சாந்தப்படுத்துகிறார். சிலருக்கு உதீ பிரஸாதம் அளிக்கிறார். இவ்வாறாக, சகலமான மக்களையும் திருப்தி செய்கிறார்.--

140 ''உண்மை நிலை இவ்வாறிருக்கும்போது, அவர் என்னிடம் காட்டிய கோபம் என்னுடைய ஆரம்ப நடத்தையால்தான் என்பது தெளிவு. இது கோபமன்று; எனக்குப் புகட்டப்பட்ட ஒரு போதனை; கடைசியில் என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.ஃஃ

141 ஆக, பின்னர் அவ்வாறே நிகழ்ந்தது சுவாமி, பாபாவின் பாதங்களில் ரமித்து (மகிழ்ந்து) மூழ்கிவிட்டார். ஸாயீயின் கிருபையால் தூயவராக ஆக்கப்பட்டார். பாபாவின் சேவடிகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்

142 ஸாயீபக்தியின் பிரபாவமும் வீரியமும், பொறாமையையும் தீய இயல்புகளையும் விரட்டியடிக்கட்டும். சாந்தியையும் செல்வச்செழிப்பையும் தைரியத்தையும் ஓங்கி வளரச் செய்யட்டும். ஸாயீ பக்தர்களுக்கு, செய்வதற்கு உரிய செயல்களைச் செய்த மனநிறைவு அளிக்கட்டும்.

143 பிரபஞ்சம் கந்தர்வர்களாலும் யக்ஷர்களாலும் தேவர்களாலும் அரக்கர்களாலும் மனிதர்களாலும் நகரும் நகராப் பொருள்களாலும் நிரம்பி இருக்கிறது. பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்த முழுமுதற்பொருள் எங்கும் நிரம்பியிருப்பினும்,--

144 அது ஓர் உருவத்தை ஏற்றுக்கொள்ளாமல் அருவநிலையிலேயே நிலைத்து நின்றுவிட்டால், உருவமுள்ள மனித இனமாகிய நமக்கு உபகாரம் ஏதுமில்லை

145 தாத்பர்யம் என்னவென்றால், மனித உருவமேற்காமல் ஸாயீ விட்டுவிட்டிருந்தால், உலக மக்களுக்கு நல்வழி காட்டுவதும், துஷ்டர்களையும் கெடுமதியாளர்களையும் தண்டித்துச் சீர்திருத்துவதும், பக்தர்களுக்கு அநுக்கிரஹம் செய்வதும் எப்படி?

146 இந்த அத்தியாயம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சமயத்தில், ஸாயீ நல்லுபதேசம் செய்த விருத்தாந்தம் ஒன்று என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. உபதேசத்தை ஏற்றுக்கொள்பவர்கள் பயனடைவர்.

147 விருத்தாந்தம் மிகச் சிறியது. ஆயினும், இதைக் கருத்தில் கொள்பவர்களுக்கு மங்களம் விளையும். ஆகவே, சித்தத்தைச் சிறிது நேரம் என்னிடம் செலுத்துமாறு கதைகேட்பவர்களை வேண்டுகிறேன்.

148 ஒருசமயம், பழுத்த பக்தரான மஹால்ஸாபதி, நானா ஸாஹேப் சாந்தோர்க்கருடன் மசூதியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது நடந்த அதிசயத்தைப்பற்றிக் கேளுங்கள்.

149 ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்வதற்காக வைஜாபூர்வாசியான ஒரு பணக்காரர் குடும்ப சகிதமாக அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தார்.

150 முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்மணிகள் வந்ததைக் கண்ட நானா சங்கோசமடைந்தார். கோஷாப் பெண்டிர் கூச்சமின்றி தரிசனம் செய்வதற்காக, அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் நானா வெளியே செல்ல நினைத்தார்.

151 ஆகவே, அங்கிருந்து நகர்வதற்காக நானா எழுந்தார். பாபா அவரைத் தடுத்து நிறுத்திச் சொன்னார், ''வர விரும்புபவர்கள் படியேறி வருவார்கள். நீங்கள் அமைதியான மனத்துடன் உட்கார்ந்திருங்கள்.ஃஃ

152 அங்கிருந்தவர்களில் ஒருவர் வைஜாபூர் கனவானிடம் சொன்னார், ''இவர்களும் தரிசனத்திற்காகவே வந்திருக்கின்றனர். நீங்களும் மேலே வரலாம். தடை ஏதுமில்லை.ஃஃ அவர்கள் அனைவரும் வந்து ஸாயீக்கு வந்தனம் செய்தனர்.

153 வந்தனம் செய்தபோது, அவர்களுள் ஒரு பெண்மணி தம் முகத்திரையைச் சற்று விலக்கினார். பேரெழில் வீசிய அந்த முகத்தைக் கண்ட நானா தம் உள்ளத்துள் மோஹங்கொண்டார்.

154 சுற்றியிருந்தவர்கள் கவனித்துக்கொண் டிருந்தபோது அவ்வழகிய முகத்தை உற்றுப் பார்ப்பதற்கு நானா சங்கடப்பட்டார். தாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? மோஹமென்னவோ கட்டுக்கடங்கவில்லை

155 பாபாவின் முன்னிலையில் நானா பெருங்கூச்சமடைந்தார். தலையை நிமிர்த்த முடியவில்லை. ஆனாலும் தயங்கித் தயங்கிக் கண்வீச்சு அந்தத் திசைக்குத் திரும்பியது. நானா இருதலைக்கொள்ளி எறும்பானார்.

156 இதுவே நானாவின் உள்மன நிலை. எல்லாருக்குள்ளும் உறையும் பாபா இதை அறிந்துகொண்டார். மற்றவர்களால் இதை எப்படி உணரமுடியும்? சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றுதான் அவர்களால் மல்லுக்கட்ட முடியும்

157 நானாவின் உள்மனத்தையும் அதில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தையும் நன்கு உணர்ந்த பாபா அவரை சுயநிலைக்குக் கொண்டுவருவதற்காக ஓர் உபதேசம் செய்தார். அதைக் கேளுங்கள்.

158 ''நானா, எதற்காக மனக்கலக்கம் அடைகிறீர்? எது தன்னுடைய தர்மத்தின்படி இயல்பாகச் செயல்படுகிறதோ, அது யாராலும் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. ஏனெனில், அதில் கேடு ஒன்றும் இல்லை.--

159 ''பிரம்மதேவருடைய சிருஷ்டியைப் பார்த்து நாம் ரஸிக்காவிட்டால், அவருடைய புத்தி சாதுர்யமும் திறமையும் வீணாகப் போய்விடும். நாளடைவில் எல்லாம்
சரியாகிவிடும்.--

160 ''வாயிற்கதவு திறந்திருக்கும்போது புறக்கடைக் கதவை ஏன் அணுகவேண்டும்? மனம் தூய்மையாக இருந்தால், சங்கடம் ஏதும் இல்லை.--

161 ''மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாதவன், எதற்காக, யாரைப் பார்த்து பயப்பட வேண்டும்? கண்கள் அவற்றின் வேலையாகிய காண்பதைச் செய்கின்றன. அதுபற்றி நீர் ஏன் சங்கடப்படுகிறீர்?ஃஃ

162 இயல்பாகவே விஷய ஆர்வம் அதிகம் கொண்ட மாதவராவ், அப்பொழுது அங்கிருந்தார். தம்முடைய ஆர்வத்தைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, ''இந்தப் பேச்சுக்கு என்ன அர்த்தம்ஃஃ என்று நானாவைக் கேட்டார்.

163 இவ்வாறு மாதவராவ் கேட்டபோது நானா சொன்னார், ''ஓய், கொஞ்சம் நில்லும் நாம் வாடாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, பாபா விளம்பிய வார்த்தைகளின் உட்கருத்து என்னவென்பதை விவரமாகச் சொல்கிறேன்.ஃஃ

164 வழக்கம்போல க்ஷேமகுசல விசாரிப்பு முடிந்தது. நானா ஸமர்த்த ஸாயீயை வந்தனம் செய்தார். தாம் தங்கியிருந்த இடத்திற்கு நானா திரும்பியபோது மாதவராவும் அவருடன் சென்றார்

165 உடனே மாதவராவ் வினவினார், ''நானா, நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று பாபா சொன்னதற்கும், அதற்கு முன்பு சொன்ன வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்பதை எனக்குத் தெளிவுபடச் சொல்லுங்கள்.ஃஃ

166 அர்த்தத்தைத் தெளிவுபடச் சொல்ல நானாவுக்கு ஜீவன் இல்லை. ஆகவே, அவர் சுற்றிவளைத்து ஏதேதோ பதில் சொன்னார். மாதவராவின் சந்தேகம் மேலும் வலுத்தது அவருடைய மனம் நிம்மதியாக இருக்க மறுத்தது.

167 பின்னர், மாதவராவ் செய்த நிர்ப்பந்தத்தால், நானா இதயம் திறந்தார். மசூதியில் நடந்ததனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார். மாதவராவுக்குப் புதிர் விடுபட்டது

168 பாபா எவ்வளவு உஷாராக இருந்தார் யாருடைய சிந்தனை எங்கே சிதறினாலும், எவர் அனைவருள்ளும் சாட்சியாக நிறைந்திருக்கிறாரோ, அவருக்கு எல்லா நிகழ்வுகளும் பிரத்யட்சமாகத் (கண்கூடாகத்) தெரிகின்றன

169 இந்த வியப்பூட்டும் விருத்தாந்தத்தைக் கேட்டு நீங்கள் ஆச்சரியம் அடைந்திருப்பீர்கள். இதன் சாராம்சத்தின்படி ஒழுகினால் மிகச் சிறந்த உடைமைகளான ஆடாத சமநிலையும் கம்பீரமும் பெருகும்.

170 மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது. அதைக் கட்டவிழ விடக்கூடாது. புலன்கள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடலாம். ஆனால், சரீரம் பொறுமை காக்க வேண்டும்.

171 புலன்களை நம்பக்கூடாது. ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது. கொஞ்சங்கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும்.

172 புலன்களுக்கு என்றும் அடிமையாகாதீர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஆயினும், நியமிக்கப்பட்ட விதிகளின்படியும் முறையாகத் திட்டமிட்டும் சரியான சமயத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

173 ரூபம் என்னும் விஷயம் கண்களின் பார்வைக்குச் சொந்தம். அழகை பயமின்றி ரஸிக்க வேண்டும். இங்கு நாணத்திற்கு என்ன வேலை? ஆனால், துர்ப்புத்திக்கு (கெடுமதிக்கு) இடம் கொடுக்கக்கூடாது.

174 இறைவனின் படைப்பில் உள்ள அழகை அப்பழுக்கற்ற மனத்துடன் ரஸிக்கலாம். தூயமனம் இயல்பாகவே புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும். இன்பங்களைத் துய்ப்பதென்பது மறந்துபோகும்.

175 தேரைச் சரியான இலக்குக்கு ஓட்டிச்செல்வதற்குத் தேரோட்டிதான் மூலகாரணம். அதுபோலவே, நமக்கு நன்மை செய்யும் புத்தி, உஷாராகச் செயல்பட்டு புலன்களின் இழுப்புகளைக் கட்டுக்குள் வைக்கும்.

176 தேர் எங்கே செல்லவேண்டும் என்பதைத் தேரோட்டிதான் நியமனம் செய்கிறான். அவ்வாறே, புத்தி, புலன்களைக் கட்டுப்படுத்தி, சரீரம் தன்னிஷ்டம்போல் செயல்படாமலும், மனம் சஞ்சலத்திலேயே மூழ்கிப்போகாமலும் நம்மைக் காப்பாற்றுகிறது.

177 சரீரம், புலன்கள், மனம், ஆகியவற்றுடன்கூடிய ஜீவன், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து முடித்த பிறகு, விஷ்ணுபதத்தை அடைகிறது. இவ்வாறு நிகழ்வது புத்தியின் சாமர்த்தியத்தினால்தான்

178 மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலனுறுப்புகளை முரட்டுக் குதிரைகளாகவும், தொடுவுணர்வு, சுவை, பார்வை, வாசனை, ஓசை ஆகிய புலனின்பங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நரகத்திற்கு மார்க்கங்களாகவும் கருதவேண்டும்.

179 விஷயசுகங்களின்மீது சிறிதளவு பற்று இருந்தாலும் பரமார்த்த (வீடுபேறு) சுகத்தை அது நாசம் செய்துவிடும். ஆகவே, அதை மிச்சம்மீதியின்றித் தியாகம் செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

180 கை, கால் முத­ய புறவுறுப்புகள் பற்றிழந்துவிட்டாலும், அந்தக்கரணம் ஏங்குமானால், ஜனனமரணச் சுழற்சிக்கு முடிவேற்படாது. விஷயசுகங்கள் அவ்வளவு அபாயகரமானவை

181 விவேகமுள்ள சாரதி கிடைத்தால், லகான்களை லாவகத்துடன் கையாள்வார். அப்பொழுது, புலனின்பங்களாகிய குதிரைகள் கனவிலும் சிறிதளவும் நெறிதவறிச் செல்லமாட்டா.

182 சமநிலை கலையாத மனமுடையவனும் அடக்கும் சக்தி பெற்றவனும் உஷாரானவனும் தொழில்நுட்பம் தெரிந்தவனும் சமார்த்தியசா­யுமான மனிதன் தேரோட்டியாகக் கிடைக்கும் பாக்கியம் ஏற்படுமானால், விஷ்ணுபதம் வெகுதூரத்திலா இருக்கிறது?

183 அந்தப் பதமே பர பிரம்மம் (முழுமுதற்பொருள்). வாசுதேவன் என்பது அதற்கு மற்றொரு பெயரே. அந்தப் பதமே அனைத்திலும் சிறந்த, உயர்ந்த, என்றும் நிலையான, அப்பாலுக் கப்பாலாய் இருக்கும் நிலை.

184 ஆக, இந்த அத்தியாயம் முடிவடைகிறது. அடுத்தாற்போல் வரும் அத்தியாயம் இதைவிட வசீகரமானது. சான்றோர்களாகிய பக்தர்களின் மனத்தைக் கவர்ந்து இழுக்கும். கிரமமாகக் கேளுங்கள்.

185 பிரிவதற்கு முன்பாக -- சிருஷ்டியை நிர்வகிப்பவரும் புத்திசக்தியைத் தூண்டிவிடுபவரும் எவரோ, அந்த ஸத்குருவின் சேவடிகளில் ஹேமாட் தலைசாய்த்து வணங்குகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'மஹானை சோதித்தல் - மனத்தை அடக்குதல்ஃ என்னும் நாற்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.



Share :
Get it on Google Play